மகளிர் இலவச டிக்கெட் வடமாநிலத்தவருக்கு விற்பனை… நடத்துனர் சஸ்பெண்ட்…
அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் இலவச டிக்கெட்டை வடமாநிலத்தவருக்கு விற்ற நடுத்துனரை போக்குவரத்து துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றதும், முதல் நாளில், பெண்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்ற திட்டத்தில் கையெழுத்திட்டார்.
அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணித்து வந்த நிலையில், இலவச பயண சீட்டு வழங்கும் முறை கொண்டு வரப்பட்டது. இலவசமாக பயணிக்கும் நான்கு விதமானோருக்கு, நான்கு வண்ணங்களில் பயண சீட்டுகடுக்களை போக்குவரத்து கழகம் அச்சிட்டள்ளது.
அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிவப்பு நிறத்திலும், அவர்களது உதவியாளர்களுக்கு நீல நிறத்திலும், மூன்றாம் பாலினத்தவருக்கு பிங்க் நிறத்திலும், பெண்களுக்க பிரவுன் நிறத்திலும் இலவச டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து இலவச பயணச்சீட்டு நடத்தனர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சேலத்தில் அரசு பேருந்தில் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டை வடமாநில ஆண்களுக்கு கொடுத்ததாக, நடத்துனர் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், இலவச டிக்கெட்டை வடமாநில ஆண்களுக்கு கொடுத்து, கட்டணம் வசூலித்த நடத்துனர் நவின்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
