தமிழகத்திற்கு 1 கோடி தடுப்பூசிகள் தேவை… பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்…
தமிழ்நாட்டிற்கு 1 கோடி கொரோனா தடுப்பூசிகளைச் சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள, பொதுமக்கள் முகாம்களை நோக்கி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாட்டால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டு மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகள் கிடைத்திட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா தடுப்பூசி தேவையைப் பூர்த்தி செய்வது கடினமாக உள்ளது என்றும், தடுப்பூசி விநியோகம் செய்வதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் தொகை அடிப்படையில் சரியன அளவில் தடுப்பூசி கிடைத்திட சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்வது போன்றே தமிழகத்திற்கும் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
