தூத்துக்குடி ராக்கெட் ஏவுதளம் அமைப்பு திட்டம்..! நிலம் கையக்கப்படுத்தும் பணி தீவிரம்.! கனிமொழி எம்.பி. தகவல்
தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார் .
தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்ட நிலையில், புதிதாக பள்ளி கட்டிடங்கள் கட்டித் தரவேண்டும் என பள்ளி நிர்வாகத்தினர் நாடாளுமன்ற திமுக குழுத் துணைத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியை கொண்டு இந்த பள்ளி கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கையை கனிமொழி மேற்கொண்டார்.
இதையடுத்து நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய கனிமொழி எம்பி கூறியதாவது :
‘ தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில், மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் தொடங்கும் என்று நம்புகிறோம். டெல்லி செல்லும் போது இதை நான் வலியுறுத்துவேன். முதலில் நிலம் வாங்கி கொடுத்த பிறகு தான் அவா்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் செய்ய முடியும் அதற்கான வேலைகள் நடந்து கொண்டே இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
