Uncategorized

மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கர்நாடகாவில், மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, சி.பி.எம்., சி.பி.ஐ. உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பிரதிபலிக்கும் வகையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கர்நாடகாவில் மேகதாது அணை எந்த சூழலிலும் கட்டப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று தெரிவித்துள்ளார். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், காவிரி நதிநீர் பிரச்சனைக்கு அனைத்து ரீதியிலும் சட்டப்போராட்டம் நடத்தி 72 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்றும், உரிமையை நிலைநாட்டிய இயக்கம் அதிமுகதான் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கர்நாடகாவில் உற்பத்தியாவதால் காவிரி நீர் அவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல என்றும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயன்றால் நிதிமன்றம் மூலமாக தீர்வுகாண முடிவு என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.