கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை… அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை…
கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக கோயில்களில் 5 ஆண்டுகளில் தற்காலிகமாக பணிபுரிபவர்களின் பணி, ஒரு மாதத்திற்குள் நிரந்தரம் செய்யப்படும் என்றார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள், வாடகைக்கு இருப்பவர்கள், திருக்கோயிலுக்கு உரிய மனு அளித்தார் அவர்கள் வாடகைதாரர்களாக ஏற்று உத்தரவு வழங்கப்படும் என கூறினார்.
குடமுழுக்க நடத்தப்படாமல் உள்ள கோயில்கள் கண்டறியப்பட்டு, அவை புனரமைத்து, குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மற்றும் உடந்தையாக இருந்தவர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் சஸ்பென்ட் செய்யப்படுவார்கள் என்ற அமைச்சர், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் குடமுழுக்கு மராமத்து பணிகள் நடக்காமல் இருந்ததற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் அதிமுக ஆட்சியில் கோயில் சிலைகள் மாற்றப்பட்டதாக கூறப்படும் புகார்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
