மேகதாது அணை விவகாரம்… அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு…
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக வரும் 12 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளர்.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும், தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சருக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார். மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார். தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாது பிரச்சனையில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், மேகதாது அணை தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வரும் 12 ஆம் தேதி நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒருமித்த கருத்து எட்டக்கூடிய வகையில் மேகதாது விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
