குற்றம்

பணமோசடி புகாரில் முன்னாள் அமைச்சரின் சகோதரி மகன் கைது…

அரசு வேலை வாங்கி தருவதாக 35 லட்சம் ரூபாயை ஏமாற்றிய முன்னாள் அமைச்சரின் சகோதரி மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவர் சரோஜா. இவரது சகோதரி மகன் ரமேஷ் பாபு. இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள குணசேகரன் (47), மற்றும் பொன்னாங்குப்பத்தை சேர்ந்த பாக்யராஜ் உடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரிடமும் ரமேஷ் பாபு, தன்னுடைய சித்தி சரோஜா, மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

அவரது பேச்சை நம்பிய குணசேகரன், தனது உறவினர்கள், தெரிந்தவர்கள் என 17 பேருக்கு சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், கிராம உதவியாளர் உள்ளிட்ட அரசு வேலைகளுக்கு பணம் வாங்கியுள்ளார். மொத்தம் 35 லட்சம் ரூபாயை, ரமேஷ் பாபுவின் முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி ரேவதி, மாமா சௌந்தரராஜன் ஆகியோரின் வங்கி கணக்கில் குணசேகரன் செலுத்தியுள்ளார். பணம் பெற்ற ரமேஷ் பாபு 2 ஆண்டுகளாக அரசு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குணேசேகரன், பணத்தை திரும்ப தரும்படி ரமேஷ்பாபுவிடம் கேட்டுள்ளார். ஆனால் ரமேஷ்பாபு பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இது குறித்து வெளியில் சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் ரமேஷ் பாபு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், குணசேகரன், விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். புகார் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், விசாரணை மேற்கொள்ளும்படி எஸ்.பி.ஸ்ரீநாதா உத்தரவிட்டார். நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில, ரமேஷ் பாபு உள்பட 4பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.