அரசியல்தமிழ்நாடு

கொரோனா பூஜ்ஜிய நிலைக்கு வந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை குறித்து முடிவெடுக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை என்றும் கொரோனா தொற்று முழுமையாக குறைந்தபிறகு ஸ்டெர்லைட் ஆலை குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மருத்துவ கல்லூரியின் மறுசீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக மறு சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 55,052 பேர் என்றும், 2200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில், தற்போது 115 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என்றும், கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என மருத்துவ வல்லுநர்கள் கூறப்படும் நிலையில், ஆக்சிஜன் சேமிப்பது மிக அவசியம் என்றார்.தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியத்துக்கு வந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து யோசிக்கலாம் என்றும் தற்போது ஆக்சிஜன் சேமிக்கலாம் என்றார். ஆலையை மூட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.