“ஒன்றிய அரசு” என்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் கூறும் புதிய விளக்கம்…
ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் வார்த்தை இல்லை என்பது வரவேற்கத்தக்கது என்று பேரவையில் பேசிய ஈஸ்வரனின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திமுக ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்றதில் இருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வாடிக்கையாகிவிட்டது. சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை என்றும், ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல என்றம் மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதன் பொருள் என்றம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
எந்த தலைவரும் இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறவில்லை என்றும் மாநிலங்கள் பிரித்து தரப்பட்டுள்ளது என்றுதான் பேரறிஞர் அண்ணா 1963 ஆம் ஆண்டு மாநிலங்களவில் பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது மாநிலங்களை பிரித்து கொடுப்பதற்கான அதிகாரம் இந்திய அரசிடம்தான் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதாகவும், மாநிலங்கள் ஒன்று சேர்ந்துதான் யூனியன் என்ற வார்த்தைக்கு பொருள் என்ற வாதம் சரியானதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன் என்பதைதான் Union of States என்பதற்கு பொருள் என்பதையும், இந்திய நாடு பிரிக்கப்பட முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம் என்பதைத்தான் Union of States என்ற வாசகம் நமக்கு உணர்த்துகிறது என்பதையும் இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் ஜெய்ஹிந்த் வார்த்தை இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி, இதனால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசியது வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். விடுதலைட்பபோராட்டத்தின்போது உணர்வுப்பூர்வமாக பயன்படுததப்பட்ட வெற்றிச்சொல் என்றும், இந்த சொல்லை இழிவுபடுத்தும் வகையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பெட்ரோல் – டீசல் விலை குறைப்பு, நகைக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
