“மரத்தின்மேல் இருந்தாலும் கொரேனா வரும்… கீழிறங்கி வாங்க தம்பி”… இளைஞர்களிடம் கெஞ்சிய சுகாதார துறை ஊழியர்…
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு ஒரே தீர்வாக தடுப்புசி மட்டுமே உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி போடச் சென்ற சுகாதார குழுவினரைப் பார்த்து பொதுமக்கள் பதுங்கிய சம்பவம், கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள மலைக்கிராமத்தில் நடந்துள்ளது.
தமிழக மாவட்டங்களில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு வரும் நிலையில், தொண்டாமுத்தூர் அருகில் உள்ள மலைக்கிராம வாசிகள், தடுப்பூசி போட மறுத்துள்ளனர். முல்லங்காடு, கல்கொத்திபதி, சர்கார்பூர்த்திபதி, வெள்ளைபதி உள்ளிட்ட 5 மலைக்கிராமங்களுக்கு, சுகாதார துறையினர் தடுப்பூசிகளுடன் சென்றனர். சுகாதார துறையினரைப் பார்த்த மலைக்கிராம மக்கள், அங்கிருந்து தப்பி சென்றனர். சில இளைஞர்கள் அருகில் உள்ள மரத்தின் மேல் ஏறினர்.

இதைப் பார்த்த சுகாதார துறையைச் சேர்ந் பெண் ஊழியர் ஒருவர், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து விளக்கி, அவர்களை மரத்தில் இருந்து இறங்கி வரச் செய்தார். மரத்தின்மேல் இருந்தாலும், கொரோன வரும்… கீழிறங்கி வாங்க தம்பி… என்று அவர்களை மரத்தில் இருந்து இறங்கி வரச் செய்தார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், நுரையீரல் பாதிக்காமல் இருக்கும் என்றும் அவர்களிடம் எடுத்து கூறினார்.
5 மலைக்கிராமங்களிலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இரட்டை இலக்கை மட்டுமே தாண்டியுள்ளது. பின்னர் கிராமங்களுக்குள் சென்று தடுப்பூசி செலுத்த மருத்துவ ஊழியர்கள் திட்டமிட்டனர் ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை. தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால், பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்வதாக கிராம மக்கள், திட்டவட்டமாக கூறியதை அடுத்து, சுகாதார துறையினர் அங்கிருந்து திரும்பினர்.
