தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பிற மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் 4 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.