அரசியல்தமிழ்நாடு

அதிமுக தடுப்பூசி குறித்து விமர்சிப்பது சற்று ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொது சுகாதாரத் துறை மற்றும் யுனிசெப் இணைந்து நடத்தும் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திருவான்மியூரில் இன்று துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :

தமிழகத்தில் இரண்டாம் அலை முடிவுக்கு வருகிறது என்ற நிலை இருந்தாலும், மக்களை பாதுகாப்பாக இருக்க வலியுறுத்துவது அரசின் கடமை, அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் 10 வாகனங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளும் பணி தொடங்கி வைக்கப்பட்டது .

கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் பாதிப்பு, அதில் இருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்தும் இதில் அறிவுறுத்தப்படும் என்ற அவர், தடுப்பூசி தான் கொரோனா தொற்றுக்கு ஒரே தீர்வு என்ற அடிப்படையில் அதுகுறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்கொள்கிறோம் என்று கூறினார்.

அதிமுக ஆட்சியில் நாள் ஒன்றுக்கு சரியாக 61 ஆயிரம் பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டது எனவும், திமுக ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 1.34 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது என்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அதிமுக தடுப்பூசி குறித்து விமர்சிப்பது சற்று ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. செங்கல்பட்டில் எச்எல்எல் நிறுவனம் எங்குள்ளது என ஓபிஎஸுக்கு தெரியுமா” எனக் கேள்வி எழுப்பினார்.