“அம்மாவின் மறு உருவமே சின்னம்மா”… சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகி போஸ்டர்…
மதுரையில் சசிகலாவுக்கு ஆரவாக அதிமுக மகளிர் அணி புறநகர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் போஸ்டர் ஒட்டியுள்ளார். அம்மாவின் மறு உரவமே சின்னம்மா என்ற வாசகத்துடன் அந்த போஸ்டர் இடம் பெற்றுள்ளது.
சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையான சசிகலா, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்குப் பின்னால் ஏதோ காரணம் இருக்குமென்று அரசியல் நோக்கர்கள் யூகித்திருந்தனர். இந்த நிலையில், அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் உரையாடி வருகிறார். அதன்படி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
அதிமுகவினருடன் உரையாடும் ஆடியோக்களை, அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இது அதிமுக கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டாலு, அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அதிமுக தலைமை கூறி வருகிறது.

சசிகலாவுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் சுஜாதா, சசிகலாவுக்கு ஆதரவாக மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். திருப்பரங்குன்றம், செல்லூர் பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில், அம்மா அவர்களுடன் 30 ஆண்டுகள் உடன் உற்றார் உறவினராக, தோழியாக அனைத்திலும் பங்கு கொண்ட மரியாதைக்குரிய சின்னம்மா அவர்கள் அதிமுகவை ஒற்றை தலைமையில் வழி நடத்தி தலைமை ஏற்க வாருங்கள் என்றும், ஒன்றரை கோடி தொண்டர்களின் துயர் தீர்க்க கட்சியை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற வரும் அம்மாவின் மறு உருவமே வருக வருக என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக உறுப்பினரான பாலகிருஷ்ணன் என்பவரும் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளார்.
