Covid19அரசியல்

“தடுப்பூசி இருப்பை முன்கூட்டியே அறிவியுங்கள்”… முகாம்களில் நிலவும் குழப்பத்தைத் தவிர்க்க எடப்பாடி பழனிசாமி சொல்லும் தீர்வு…

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல்வேறு இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாட்டால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் போக்கு நிலவுகிறது. இந்த நிலையில், தடுப்பூசி மையத்தில் எத்தனை பேருக்கு தடுப்பூசி இருக்கிறது என்பதை அரசு முன்கூட்டியே அறிவித்தால், இதுபோன்ற நிலை தவிர்க்கப்படும் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாக கூறினார். மத்திய அரசிடம் மாநில அரசு தடுப்பூசி பெற்றாலும், முழுமையாக மக்களுக்கு தடுப்பூசி போட முடியவில்லை என்றார். தடுப்பூசி மையங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்றனர். ஆனால் 300 – 400 பேருக்குதான் தடுப்பூசி இருக்கிறது என்றும் மற்றவர்களுக்கு இல்லை என்றும் கூறி பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக கூறினார்.

தடுப்பூசி மையங்களில் எத்தனை பேருக்கு தடுப்பூசி இருக்கிறது என்பதை அரசு முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட டோக்கன்கள் கொடுக்கப்பட்டால் அவர்கள் மட்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றார். அவ்வாறு இல்லாமல் தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பைவெளியிட்டுவிட்டால் அங்கு ஆயிரக்கணக்கானோர் கூடி விடுகின்றனர்.

கொரோனா தடுப்பூசி மையங்களில் பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருந்து பிறகு, 400 பேருக்கு மட்டும் தடுப்பூசி கையிருப்பு உள்ளது என்றும் மற்றவர்கள் கலைந்து செல்லுங்கள் என்று சொல்லும்போது, அவர்கள் ஏமாற்றத்துடன் செல்லுகின்ற காட்சியை ஊடகங்களில் காண முடிகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். முன்கூட்டியே தடுப்பூசி எவ்வளவு இருக்கிறதோ அவர்களுக்கு டோக்கன் கொடுத்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை தடுக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.