அரசியல்தமிழ்நாடு

எம்.ஜி.ஆர். – ஜெலலிதாவை போன்று அதிமுகவை வழி நடத்துவேன்… சசிகலா ஆடியோ பேச்சு…

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா காலத்தில் அதிமுக எப்படி இருந்ததோ அது போல கட்சியை வழி நடத்த உள்ளதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையான சசிகலா, அரசியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார். இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் உரையாடி வருகிறார். அதிமுகவினருடன் சசிகலா தொலைபேசியில் பேசி வருவது, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சசிகலாவுடன் பேசிய அதிமுகவினர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

ஆனாலும், அதிமுகவினருடன் சசிகலா தொலைபேசியில் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த நிலையில், தேனி அதிமுக நிர்வாகியான கர்ணன் என்பவருடன் சசிகலா தொலைபேசியில் உரையாடிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தாயைவிட அவரை அதிக நாட்கள் பாதுகாத்தது தமது பாக்கியம் என்றார். 4 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரு சிறை செல்வதற்கு முன், சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட்டி ஆட்சி முறையாக அமைத்துக் கொடுத்து விட்டு சென்றதை சசிகலா நினைவு கூர்ந்தார்.

கட்சி தொண்டர்களிடம் ஆறதல் கூறி வருகிறேன் என்றும் கட்சி வீணாவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார். கட்சியின் வேர்கள்தான் அடிமட்ட தொண்டர்கள். அவர்களை நீக்குவது என்பது நல்லதே கிடையாது என்றும் எனக்கு துணையாக தொண்டர்கள் இருப்பதாக கூறினார். முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல் கட்சியை கொண்டு வந்து ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்றார். எம்.ஜி.ஆர் பாடுபட்டு வளர்த்த கட்சி, ஜெயலலிதாவால் பெரிய அளவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும். நிச்சயம் அதை செய்து காட்ட முடியும் என்றும் சசிகலா ஆடியோவில் பேசியுள்ளார்.