தமிழ்நாடு

“ஆவின் பணி நியமனத்தில் முறைகேடு”… லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு பால்வளத் துறை இயக்குநர் பரிந்துரை…

ஆவின் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்த நிலையில், 50 அதிகாரிகள் சிக்கவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனத்தில் 236 பணியிடங்களுக்கு நடைபெற்ற நியமனத்தில் முறைகேடு என புகார் எழுந்துள்ளதை அடுத்து, புகார் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு பால் வளத்துறை இயக்குநர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இரண்டு பேர் உட்பட 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆவினில் ஓராண்டில் மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப ஊழியர்கள் என 236 பணி நியமனங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. பணி நியமன முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்றோர் சங்கம் வலியுறுத்தியது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க இருந்தபோது, அப்போதைய அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் விதி மீறியும், இட ஒதுக்கீடு பின்பற்றாமலும் 230-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நியமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஆவின் மேலாளர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்ப துறை விசாரணை நடத்த பால் வளத்துறை இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார். லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணையில் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.