கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு திமுகதான் காரணம்… பகீர் குற்றம்சாட்டிய எல். முருகன்…
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு திமுகதான் காரணம் என்றும், தடுப்பு மருந்து குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்ட நிலையில், சென்னை வடபழனி கோயிலுக்கு வந்த தமிழக பாஜக தலைவர் எல் முருகன் வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறைக்கு திமுகதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
கொரோனா தடுப்பு மருந்து குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார். மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு எவ்வளவு தடுப்பூசிகள் வாங்கியுள்ளது என்பது குறித்தும் எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதும், எவ்வளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
தடுப்பூசி மையங்களில் அரசு அலுவலர்களை திமுகவினர் மிரட்டி டோக்கன்களை பறிப்பதை நிறுத்தினாலே அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் என்றும் எல் முருகன் கூறினார்.
