மக்களின் பிரச்சனைகளை மனுக்களாய் பெற்ற பெட்டி எங்கே? சாவி தொலைந்து விட்டதா? பெட்டியே தொலைந்துவிட்டதா? சீமான் கேள்வி…
தேர்தலுக்கு முன்பு தமிழக மக்களிடம் மனுக்களைப் பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பதவியேற்ற 100 நாட்களில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதன்படி முதலமைச்சராக பொறுப்பேற்றதும், மனுக்கள் மீதான நடவடிக்கை எடுப்பதற்காக அதிகாரி ஒருவரை நியமித்து அவரது மேற்பார்வையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்த்துவிட்டாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், தமிழகத்தின் பிரச்சனைகள் என்னவானது என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில், திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கம் மாமருந்து என்றும் தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளுக்கும் திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என்று வானளாவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் பிரச்னைகள் என்னவாது, என்றும் எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப்போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே என்று ஆதங்கம் தெரிவித்துள்ளர். மக்களின் பிரச்சனைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை… பெட்டியே தொலைந்துவிட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
