அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜுலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு… தமிழக அரசு அறிவிப்பு…

தமிழகத்தில் ஜூலை 5 ஆம் தேதி கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி ஜூலை 5 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோது, தமிழக மாவட்டங்களை 3 வகைகளாகப் பிரித்திருந்தார்கள். அதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூடுதலாக தளர்வுகள் வழங்கப்பட்டன. பொதுப்போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில், மேற்கண்ட 4 மாவட்டங்களில் மேலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து தனியார் நிறுவனங்களில் 100 சதவிகித பணியாளர்கள் பணிபுரிய அரசு அனுமதி வழஙகியுள்ளது. அனைத்து தனியார் ஜவுளி கடைகளில், குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் காலை 9 மணி வரை மாலை 7 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள், விளையாட்டுக்கூடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வழிபாட்டுதலங்களில் நிலையான வழிகாட்டு நேடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

கொரோனா பரவல் குறைந்த அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு மாலை 7 மணிவரை நேர தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.