குற்றம்

செல்போனில் ஆண் நண்பர்களுடன் பேச்சு… மனைவி கொலை செய்த கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு…

ஆண் நண்பர்களுடன் செல்போனில் அடிக்கடி பேசிக் கொண்டிருந்த மனைவியை, கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை, கணபதியை அடுத்த காந்திமா நகர் பகுதி, மூன்றாவது வீதியைச் சேர்ந்தவர் குமார் என்கிற லவேந்திரன் (49). அவரது மனைவி கவிதா (32). குமார், பழைய கட்டிடம் இடிக்கும் பணியை செய்து வருகிறார். கவிதா வீட்டின் அருகில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார்.

கவிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி பூபதி என்கிற மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இலங்கை அகதியான குமார் என்கிற லவேந்திரனை கவிதா திருமணம் செய்து கொண்டுள்ளார். குமார், கவிதா மற்றும் கவிதாவின் மகன் பூபதி ஒன்றாக வசித்து வந்துள்ளனர். குமாரை திருமணம் செய்து கொண்ட கவிதா யோசுவா என்ற மகனைப் பெற்றெடுத்தார்.

கவிதா, செல்போனில் அடிக்கடி ஆண் நண்பர்களுடன் பேசி வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், குமாரிடம் கோபித்துக் கொண்டு, கவிதா தனது நண்பர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்த கவிதாவுக்கும், குமாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையால் கவிதாவை, குமார் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கவிதா மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கவிதா உயிரிழந்ததை அடுத்து, குமார் அங்கிருந்து தனது இரு சக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளார்.

குமார் இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்வதைப் பார்த்த, பக்கத்து வீட்டைச் சேர்ந்த கவிதாவின் சித்தப்பா மகன் சௌந்தரராஜன், வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது அக்கா கவிதா இறந்து போயிருப்பதை அறிந்து, சரவணப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கவிதாவின் உடலைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கவிதாவின் சித்தப்பா மகன் சௌந்தரராஜன் அளித்த புகாரை அடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார், குமாரை தேடி வருகின்றனர்.