4 வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்தால் கொரோனாவின் எந்த அலையும் எதுவும் செய்யாது..! அமைச்சர் மா. சுப்பிரமணியன்
கொரோனாவின் முதல் அலை 2வது அலை அடுத்து வரும் எந்த அலையானாலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவுதல், தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த 4 வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்தால், எந்த அலையும் ஒன்றும் செய்யாது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து மேலும் பேசிய அவர் கொரோனா அல்லது எந்த வைரஸ் தாக்கமாக இருந்தாலும், அதில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரே வழி தடுப்பூசி. அந்த தடுப்பூசியை கூடுதலாக கேட்டு பெற்று போடுவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சிறிய மாவட்டங்களில் போட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு மிக விரைவில் 75 சதவீதம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். எனவே அதனை பெற்று தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்குவோம்.
தமிழ்நாட்டில் நீட்டிற்கு எதிரான தீர்மானம் மட்டுமே தீர்வாகாது. ஏற்கனவே சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்கள். ஆனால், மத்திய அரசு அனுமதி அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டது. அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு 2006ல் அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் அப்போதைய முதலைமச்சர் கருணாநிதியால் நுழைவுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.
தந்தையின் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளார். அந்தக் குழுவின் அறிக்கை வந்த பின்னர், குழுவின் அறிக்கையுடன் சேர்த்து, தீர்மானம் இயற்றி அனுப்பினால் அதற்கு வலு கிடைக்கும் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து நிச்சயம் முதலமைச்சர் ஸ்டாலின் விலக்கு பெற்று தருவார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
