அரசியல்தமிழ்நாடு

கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் குறித்து ஒரு வரி கூட இடம் பெறவில்லை… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…

கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் குறித்து ஆளுநர் உரையில் ஒரு வரி கூட குறிப்பிடாதது விவசாயிகளுக்கு திமுக அரசு அநீதி இழைப்பதாக, தான் கருதுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-ன் உரை மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். தேர்தலின்போது திமுக வெளியிட்ட அறிவிப்புகள் எதுவும் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தது. ஆனால், அது பற்றி ஆளுநர் உரையில் எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்று எதிர்கட்சி தலைவர் குற்றம் சாட்டினார். அதேபோல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்குவதாக திமுக அறிவித்தது. அது தொடர்பான அறிவிப்பும் எதுவும் இடம் பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக வறினார்.

மீன்பிடி தடைக்காலங்களின்போது, மீனவர்களுக்கு உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்தும் எதுவும் இடம்பெறவில்லை என்றும், கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம் குறித்து ஒரு வரி கூட ஆளுநர் உரையில் குறிப்பிடாதது விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாக தான் கருதுவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார்.