அரசியல்தமிழ்நாடு

அதிமுகவை அபகரிக்க சசிகலா வஞ்சக வலையை விரிக்கிறார்… முன்னாள் துணை சபாநாயகர் ஜெயராமன் குற்றச்சாட்டு…

அதிமுக செயல்வீரர்கள் உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணியாகவும், அதிமுகவை அபகரிக்க, மீண்டும் சசிகலா வஞ்சக வலையை விரிப்பதாகவும் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையாக விமர்சித்தார்.

அண்மை காலமாக அதிமுகவினருடன், சசிகலா தொலைபேசியில் உரையாடி வரும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர், அதிரடியாக அக்கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்கள். இந்த நிலையில், சசிகலாவுக்கு எதிராக, அதிமுகவினர் கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றி வருகின்றனர். சசிகலாவின் செயலுக்கு அதிமுக மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூரில், மாநகர் மாவட்ட அதிமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட அதிமுக செயலரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது பேசிய அவர், தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா, தற்போது கட்சியை அபகரிக்கும் முயற்சியில், சசிகலா இறங்கியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

தொலைபேசியில் தொண்டர்களிடம் பேசுவதைப்போல், வினோத நாடகத்தை சசிகலா அரங்கேற்றி வருவதாகவும், அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா, சாதிய உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசி வருவது கண்டிக்கத்தக்கது என்றார். செயல் வீரர்கள் உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணியாகவும், மீண்டும் அதிமுகவை அபகரித்து விடலாம் என சசிகலா வஞ்சக வலையை விரித்துக் கொண்டிருப்பதாக கூறினார். அதிமுக மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலைபெறும் என்றும் ஒரு குடும்பத்தின்அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக் கொள்ளாது என்றம் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.