குற்றம்

“நான் செய்தது தவறுதான்”… போலீசாரின் காலில் விழுந்து கெஞ்சிய பப்ஜி மதன்…

யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த பப்ஜி மதன், தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆன்லைன் கேம் விளையாட்டின்போது, பெண்களை ஆபாசமாக பேசி பல விடியோக்களை பதிவிட்டு வந்துள்ளதாக பப்ஜி மதன் மீது புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், விசாரணைக்கு வராமல் மதன் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து யூடியூபர் மதன் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா, தந்தை மாணிக்கத்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திரனர். யூடியூப் சேனலின் நிர்வாகியாக மதனின் மனைவி கிருத்திகா இருந்ததால், அவரை கைது செய்து, வரும் 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பப்ஜி மதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் மீதான விசாரணையின்போது, யூடியூபர் மதனின் பேச்சுக்கள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். மதனின் வீடியோ பதிவுகளை கேட்டு விட்டு வந்து வாதிடும்படி, அவரது வழக்கறிஞருக்கு நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில் பெண்களிடம் ஆபாசமாக பேசியது மற்றும் பண மோசடி புகாரில் தேடப்பட்டு வந்த பப்ஜி மதன், தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். போலீசாரிடம் சிக்கிய மதன், தான் செய்தது தவறு என்று கூறி போலீசாரின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டது தவறுதான் என்று ஒப்புக் கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மதன் வைத்திருந்த லேப்டாப், செல்போன்கள், கார் உள்ளிட்டவைகளை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மதனை சென்னைக்கு அழைத்து வரப்படும்மதன், அவரிடம் வாக்குமூலம் பெற்றப்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவின் வங்கி கணக்கை முடக்கி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளது.