கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: மருத்துவ கல்வி இயக்குநர்
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது தாக்கம் தற்போது குறைந்து கொண்டு வரும் நிலையில் விரைவில் 3-வது அலை தாக்கக் கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா தொற்றின் 3-வது அலையின் தாக்கத்தில் 18 வயதுக்கும்கீழ் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர், கொரோனாவின் புதிய அலைக்கு தயாராக இருக்க வேண்டும் என்று மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் டீன்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா புதிய அலைக்கு குழந்தை மருத்துவர்கள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழந்தைகள் மருத்துவமனைகளிலும், 100 படுக்கைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் பிரத்யேக சிகிச்சைக்காக அவைகள் தயாராக வைத்திருக்கப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியூ படுக்கை வசதிகள் ஏற்படுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குழந்தைகள் பிரிவில் 4-ல் ஒரு பங்கு செவிலியர்கள் அவசரகால பணிக்காக தயார்படுத்திட வேண்டும் என்றும் பொது மருத்துவம் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்களும் மூன்றாவது அலைக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
