அரசியல்தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் திறப்புக்கு குதியாகுதிச்சீங்க… இப்போ மட்டும் கொரோனா வராதா?

கடந்த அதிமுக ஆட்சியின்போது கொரோனா சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டபோது, எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்தது ஏன் என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்ததால்தான் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு பொதுமக்களும், நெட்டிசன்களும் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணையை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி திறந்து வைப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும், மேட்டூர் அணை தண்ணீர், கடைமடை பகுதி வரை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உணவுத்துறையில் தமிழகம் சாதனை படைக்கும் என்று கூறிய அவர், பயிர் சாகுபடி பரப்பளவை 75 சதவிகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து கேட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததால்தான் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, கொரோனா சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இப்போது திறக்கப்போவது என்ன கடை என்று? பல்வேறு தரப்பினரும் நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.