ஓமந்தூரார் அரசு மருத்துமனை மாற்றுவதை கைவிட வேண்டும்… முதல்வருக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை…
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தை, தமிழக சட்டமன்றமாக மாற்ற முயற்சிக்க கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையை, கிண்டிக்கு மாற்றிவிட்டு, அந்த கட்டடத்தை சட்டமன்றமாக மாற்ற முயற்சி செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் பயின்று ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவ – மாணவியர் சிறந்த மருத்துவர்களாகி வருவதாக ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா காலகட்டத்தில் இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். மக்களின் ஏகோபித்த ஆதரவையும், பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ள மருத்துவமனையாக ஓமந்தூரார் மருத்துவமனை திகழ்வதாக கூறினார்.

ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்ற இருப்பதாக செய்திகள் வருவதாகவும், இது மிக வருத்தத்தை அளிப்பதாக கூறினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் அனைவருடைய மனதிலும் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கிண்டியில் புதிய பல்நோக்கு மருத்துவமனை உருவாக்குவதை வரவேற்கிறோம் என்றும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிற ஓமந்தூரார் மருத்துவமனையை அங்கிருந்து கிண்டிக்கு மாற்றப்படுவது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று கூறியுள்ளார். ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து மாற்றப்படுவது என்ற செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அத்திட்டத்தை கைவிட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
