அரசியல்தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் சரிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது என்றும், தமிழகத்தில் 36 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை என்று மருத்துவதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் கூறியதாவது: “மத்திய அரசின் சுகாதார துறை, மாநில அரசின் சுகாதார துறைகள், தடுப்பூசிகளின் அளவை வெளியிடக் கூடாது என்று சொல்கிறார்கள். சொல்லாமல் இருந்தால் மக்களுக்கு தெரியாமல் போய்விடும். அவ்வாறு சொல்லாமல் இருந்தால் மக்கள் வரிசையில் நின்று காத்திருந்து ஏமாறும் நிலை ஏற்படும். எனவே உண்மை நிலையை சொல்வதுதான் உகந்தது. அந்த வகையில்தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். தமிழகத்திற்கு இதுவரை வந்திருக்கிற தடுப்பூசிகளின் அளவு ஒரு கோடியே ஒரு லட்சத்து 63 ஆயிரம். இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் அளவு 97 லட்சத்து 62 ஆயிரத்து 957. கையிருப்பில் உள்ளது 1060 தடுப்பூசிகள். அது சென்னை மாவட்டத்துக்கு மட்டும்.

37 மாவட்டங்களில் 36 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை. மத்திய அரசின் தொகுப்பில் இருந்து ஜூன் மாதம் வருவதாக சொல்லப்பட்டிருப்பது 37 லட்சம் தடுப்பூசிகள். இது 6.5 லட்சம் தடுப்பூசிகள் வரும் 13 ஆம் தேதிக்குள் அனுப்புவதாக சொல்லியிருக்கிறார்கள். 6.5 லட்சம் தடுப்பூசிகள் வந்தால் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்படும். 37 லட்சம் என்கிற கணக்கோடு பிரதமர் அறிவித்த ஜூன் 21 ஆம் தேதிக்குப் பிறகு 18 வயதை தாண்டி அனைவருக்கும் தடுப்பூசி என்கிற இலக்கை சொல்லியிருக்கிறார்கள். அதுவும் தமிழக மக்கள் தொகை மற்றும் தொற்று பாதிப்பிற்கேற்ப கூடுதலாக தடுப்பூசிகள் தர வேண்டும் என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் அளவை பொருத்தவரை சரிந்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு தொற்றின் அளவு 17,421. பாதிப்பில் இருந்து நலம் பெற்று வீடு திரும்பியிருப்போர் 31,252. 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டிலும் நலம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மகிழ்ச்சி தருகிற ஒன்றாக இருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்னாள் எந்த மருத்துவமனையிலும் ஒரு படுக்கை கூட காலியாக இல்லை என்ற நிலை இருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ள காலியாக உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 45484 ஆக உள்ளது.

கொரோனா வைரஸ் பயம் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் மொத்தமாக குறைந்து பூஜ்ஜிய நிலைக்கு வந்தால் கூட வைரஸ் குறித்த பயம் மக்கள் மனதில் இருக்க வேண்டும். தொடர்ந்து முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பதும், அடிக்கடி கைகளை கழுவுவதும், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்” என்று பொதுமக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.