அரசியல்தமிழ்நாடு

ரூ.2 லட்சம் மதிப்பிலான கருங்கற்களைத் திருடிச் சென்ற திமுகவினர்… ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 2 பேர் மீது புகார்…

ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கருங்கற்களை திமுக நிர்வாகிகள் அள்ளிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோபனபுரம் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த ரஞ்சித்பாபு உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சோபனபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்றது. கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் கருங்கற்கள் இருந்தன. இவற்றை சேகரித்த ஊராட்சி ஒன்றியத்தினர் எதிரே உள்ள அரசு நிலத்தில் குவித்து வைத்திருந்தனர். இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கட்டுமான பணிகள் முழுமை அடைந்து, ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த அலுவலகத்துக்கு எதிரே குவித்து வைக்கப்பட்டிருந்த கருங்கற்கள் திடீரென மாயமாகியது. இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கவுன்சிலர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சோபனபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், திமுக நிர்வாகியுமான ராமசந்திரன், சோபனபுரம் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் ஆபிதா பானுவின் கணவர் சவுக்கத் அலி ஆகிய இருவரும் கற்களை அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.

ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி, டிராக்டரில் அள்ளிக் கொண்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. கருங்கற்களை எடுத்துச் செல்வதற்கு, ராமசந்திரன் யாரிடமும் முனு அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து சோபனபுரம் ஊராட்சி 10-வது வார்டு உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான திருப்பதி, உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதாவிடம் புகார் அளித்தார். கருங்கற்களை திருடிச் சென்றதாக ராமசந்திரன் மற்றும் சவுகத் அலி மீது ஆன்லைனில் காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான கருங்கற்களை திமுக நிர்வாகிகள் அள்ளிச் சென்றது துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.