அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்ற நிகழ்ச்சியை புறக்கணித்த அமைச்சர் ரகுபதி…! காரணம் இதுதான்?
புதுக்கோட்டையில் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் சீனியர் அமைச்சரான ரகுபதி நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி (ஜூன் 8 ஆம் தேதி) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொள்ளவிருந்தனர். காலை 8 மணிக்கு தொடங்கவிருந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் ரகுபதி முன்னதாகவே வந்து விட்டார். ஆனால் அமைச்சர் மெய்யநாதன், 10.45 மணி நேரமாகியும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, விழாவை துவக்கலாம் என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால், அமைச்சர் மெய்யநாதன் வந்தபிறகு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கடும் அதிருப்திக்கு ஆளான அமைச்சர் ரகுபதி, உடனடியாக மேடையில் ஏறி, அதிகாரிகளின் விருப்பப்படி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வந்து, உங்களுக்கு பணிநியமனம் வழங்குவார். மக்கள் நலன்தான் முக்கியம் என்ற பாதையில் என் அரசியல் வாழ்க்கை சென்று கொண்டுள்ளது. என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைக்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலின்தான் என் தலைவர். அவர் எனக்கு பொறுப்பை அளித்துள்ளார். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு என்னால் எந்த பாதிப்பும் ஏற்படாது. என்று பேசிய அமைச்சர் ரகுபதி, நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு சென்றார்.
பின்னர் தாமதமாக வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பணிநியமன ஆணைகளை செவிலியர்களுக்கு வழங்கினார். சீனியர் அமைச்சரான ரகுபதி, நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
