இந்தியா

பொதுமக்கள் ஒத்துழைத்தால் நிச்சயம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தால் நிச்சயம் கொரோனா தொற்றை குறைக்க முடியும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்

புதுச்சேரியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை தடுக்க புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கதிர்காமம் கலைக் கல்லூரி வளாகத்தில் இயன்முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவமனை துவக்கவிழா நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவமனையை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், பொது மக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தால் நோய்த் தொற்றைக் குறைக்க முடியும். இல்லை என்றால் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை நிலைமை மோசமாகிவிடும் . அதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். ஊரடங்கு விதிகளை கடைபிடித்து வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வலியுறுத்தினார்.

12 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தால் புதிதாக ஒரு ஆக்சிஜன் படுக்கையை உருவாக்க முடியும். எனவே அனைவரும் நன்கொடை வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆக்சிசன் படுக்கை பற்றாக்குறையைப் போக்க புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகள் உருவாக்கப்பட்டு வருகிறது என்று கூறிய தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியில் தற்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் புதிதாக 30,000 தடுப்பூசிகள் வாங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 6 லட்சம் தடுப்பூசிகள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவை வந்தவுடன் 18 வயது நிரம்பியோருக்கு தடுப்பூசி முகாம் துவக்கப்படும் எனவும் தெரிவித்தார்.