தமிழ்நாடு

ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் மீதான வழக்குகள் ரத்து..!

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மிலானி. திமுக மாவட்ட இளைஞரணி முன்னாள் செயலாளரான இவர், தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி தனித்தனியாக இரண்டு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி.எஸ் மகன், ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் இணைத்துள்ள பிரமாணப் பத்திரத்தில், உண்மையான சொத்து விபரங்களை மறைத்து பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் மீது வாக்குப்பதிவு செய்யப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேனி நீதிமன்றத்தில் புகார்தாரர் தாக்கல் செய்த புகார் மனுவுக்கு ஆதரவாக எந்த பிரமாண மனுவையும் தாக்கல் செய்யவில்லை, எனவே இந்த புகார் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தார்.