இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான் – 3..! பிரதமர் மோடி பெருமிதம்..
சந்திரயான் விண்ணில் ஏவப்படும் வரலாற்று நிகழ்வை உலகம் பார்க்கவுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் 2:35 மணிக்கு சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. சந்திராயன் 3 விண்கலத்திற்கான அனைத்து பரிசோதனைகளும் சோதனை ஓட்டங்களும் முடிவடைந்த நிலையில் எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியது. அத்துடன் விண்கலத்தை சுமந்து செல்லும் எல்விஎம்3எம்4 யடுத்து விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டன் நேற்று பிற்பகல் தொடங்கியது. அதன்படி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் சந்திராயன் 3 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திராயன் 3 வானில் ஒரு மாத பயணத்திற்கு பின் ஆகஸ்ட் மாதத்தில் நிலவை சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரான்சின் தேசிய நாள் கொண்டாட்டத்திற்காக இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்று உள்ள பிரதமர் மோடி அங்குள்ள அரங்கில் உரையாற்றும்போது ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்பட இருக்கும் வரலாற்று நிகழ்வையும் உலகம் பார்த்துக் கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
