இனியும் உயிர்ப்பலி கூடாது : சென்னை மாநகர சாலைகள் விரைவில் சீரமைக்கப்பட வேண்டும் – பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
இனியும் உயிர்ப்பலி கூடாது, சென்னை மாநகர சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் போரூர் பகுதியைச் சேர்ந்தவர் சோபனா(22). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்துவந்தார். சோபனாவின் தம்பி ஹரிஷ்(17) முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 12 ஆம் வகுப்பு படிக்கும் தனது தம்பியை பள்ளியில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற சோபனா, மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் தவறி விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள ராமதாஸ்,“சென்னை மதுரவாயல் அருகே புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் தடுமாறி விழுந்த ஷோபனா என்ற மென்பொறியாளர் மீது சரக்குந்து ஏறி நசுங்கி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். விபத்து நடந்த சாலையின் பராமரிப்பு எந்தத் துறையின் பொறுப்பு? என்பது குறித்த சர்ச்சையில் நீண்டகாலமாக பராமரிக்கப்படவில்லை என்றும், கடந்த 2020-ஆம் ஆண்டு அங்கு நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அரசுத் துறைகளின் அலட்சியம் உயிர்களை பலிவாங்கக்கூடாது.
சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள் ஆகியவற்றாலும், பருவமழை காரணமாகவும் சென்னையில் பெரும்பான்மையான சாலைகள் பயணிக்க முடியாத அளவுக்கு மோசமாக சேதமடைந்துள்ளன. அவை இன்னும் சீரமைக்கப்படவில்லை. சென்னையில் சேதமடைந்த சாலைகளால் இனி ஓர் உயிர் கூட பறிபோகக்கூடாது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க தமிழக அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
