wakfboard properties

அரசியல்இந்தியாதமிழ்நாடு

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறிய வக்ஃபு சட்டத்திருத்த மசோதா… 128 ஆதரவு, 95 எதிர்ப்பு

மாநிலங்களவையில் வக்ஃபு மசோதாவுக்கு ஆதரவாக 128 பேரும், எதிராக 95 பேரும் வாக்களித்தனர்.
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா காரசார விவாதத்திற்குப் பிறகு நிறைவேறியது. வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாக சாடினார். தொடர்ந்து பேசிய திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மசோதாவை கடுமையாக எதிர்த்தன.
வக்ஃபு வாரிய மசோதா மீதான விவாதத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, வக்ஃபு வாரிய மசோதாவை வைத்து இஸ்லாமியர்களை அடக்குவதன் மூலம் மத்திய அரசு மோதலுக்கு வழிவகுப்பதாக குற்றஞ்சாட்டினார். நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டாம் என்றும் மல்லிகார்ஜூன கேட்டுக் கொண்டார்.

திமுக எம்.பி திருச்சி சிவா பேசும்போது, “வக்ஃபு நிர்வாகத்தை கைப்பற்றுவதற்குதான் வக்ஃபு வாரிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக” குற்றஞ்சாட்டினார். இந்த மசோதாவில் குறைபாடுகள் உள்ளதாகவும், இதனை முற்றிலும் நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, “இஸ்லாமியர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசும்போது, இந்தோனேஷியா, சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் வக்ஃபு வாரிய சட்டத்தை சீரமைத்த நிலையில், இந்தியா அதனை சீரமைக்கக் கூடாதா என்று கேள்வியெழுப்பினார். தற்போதைய வக்ஃபு சட்டத்தை தவறாக பயன்படுத்தி, 5 ஆயிரத்து 970 அரசு சொத்துகள், வக்ஃபு சொத்துகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மசோதா மீதான விவாதத்தில் இருந்து திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்வதாகவும் குற்றஞ்சாட்டினார்.
விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, தமிழ்நாட்டின் திருச்செந்துறை கிராமத்தில் நடந்த நிகழ்வை மேற்கோள் காட்டி பேசினார்.

ஏழை இஸ்லாமியர்களை இந்த மசோதா பாதுகாக்கும் என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் மூத்த தலைவருமான தேவ கவுடா தெரிவித்தார்.

128 ஆதரவு ; 95 எதிர்ப்பு

தொடர்ந்து 12 மணி நேர காரசார விவாதத்திற்குப் பிறகு நள்ளிரவு 2 மணியளவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நள்ளிரவு 2.45 மணியளவில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. மசோதாவிற்கு எதிராக 95 பேர் வாக்களித்தனர்.

Read More