இன்று பரப்புரையை தொடங்கும் தவெக தலைவர் விஜய்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சியில் இருந்து தனது அரசியல் பரப்புரை சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார்.
தமிழ் திரைத்துறையில் உச்ச நடிகராக திகழும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சித் தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அரியணை ஏறும் இலக்குடன் விஜய் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இதுவரை மாநாடுகள் மூலம் மட்டுமே தொண்டர்களை சந்தித்த அவர் திருச்சியில் இருந்து தனது அரசியல் பரப்புரை பயணத்தை இன்று தொடங்குகிறார்.
திருச்சி மரக்கடை பகுதியில் காலை 10.35 மணியளவில் பரப்புரை மேற்கொள்ளும் விஜய், அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை பிரசாரம் செய்யவுள்ளார்.
பின்னர், பெரம்பலூர் மாவட்டம் செல்லும் விஜய், குன்னம் பேருந்து நிலையம் அருகே மாலை 4 மணியளவிலும், பெரம்பலூர் வானொலித் திடல் பகுதியில் மாலை 5 முதல் 7 மணி வரையிலும் மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்கிறார்.
நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
விஜயின் பரப்புரை பயணத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில், காவல்துறை கட்டுப்பாடுகளை கட்சியினர் ராணுவக் கட்டுப்பாடுடன் பின்பற்ற வேண்டுமென விஜய் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் சந்திப்பு பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விஜய், மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைக்கும் உன்னத நோக்குடன் தவெக களமாடி வருவதாக தெரிவித்துள்ளார்.
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்” என்ற மக்கள் சந்திப்பு பயணத்தை தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில் பாதுகாப்பு நிபந்தனைகளை தவெக மீது மட்டும் காவல்துறை விதித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள விஜய், அரசியல் நிலைப்பாடு கடந்து தவெக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும்போதும், திரும்பி செல்லும்போதும் விஜயின் வாகனத்தை பின் தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் நேரில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டுமெனவும், பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட அனைத்து வரவேற்பு நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.
போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும், பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்து கொள்வதோ கூடாது என்றும் கூறியுள்ளார்.
உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கம்பங்களோ அமைக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ள ஆனந்த், கட்டடங்கள், மின் விளக்கு கம்பங்கள், மரங்கள், வாகனங்கள், சிலைகள் மற்றும் அவற்றை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் அருகில் செல்லக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திருச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், விஜயின் பரப்புரை வாகனம் சென்னை பனையூரில் இருந்து திருச்சி புறப்பட்டு சென்றது.
