தை அமாவாசை 2025: ராமேஸ்வரம் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்… அக்னி தீர்த்தம் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து ராமநாதசுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உலகப் பிரசித்தி பெற்று ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலானது பாவங்கள் நீக்கி புண்ணியம் தரும் ஸ்தலமாகும். இங்கு இறந்த தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது பரிபூரண ஆசிர்வாதம் மூன்று தலைமுறைக்கு கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது.
மேலும், மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களும், ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று மாதங்களிலும் வரும் அமாவாசை நாட்களில் மிகவும் முக்கியமான நாட்களாக இருப்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று, தை அமாவாசை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் அக்னி தீர்த்தம் கடற்கரை குவிந்து புரோகிதர்கள் மூலம் எள்ளு பிண்டம் வைத்து, திதி தர்ப்பணம் கொடுத்தனர்.
இதன்பின் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று இரண்டு மணி நேரம் காத்திருந்து 22 புனித தீர்த்தங்களில் நீராடி விட்டு, பின்பு ராமநாதசுவாமி – பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்து அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்கின்றனர். மாவட்ட காவல்துறையினர் சார்பில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்படுகிறது.
