அளவுக்கு அதிகமாக மணல் அள்ளிய வழக்கு: தமிழக அரசு குற்றச்சாட்டை மறுத்த அமலாக்கதுறை…
மணல் கொள்ளை ஆய்வின் போது ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டதில் விதி மீறல்கள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த அமலாக்கத் துறை இதுவரை அந்த விதிமீறல்கள் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மணல் கொள்ளை குறித்த நிபுணர்களின் அறிக்கை சட்டவிரோதமானது என்ற மாநில அரசின் குற்றச்சாட்டுகளை அமலாக்கதுறை மறுத்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து அமலாக்கத் துறை மறுமொழி (rejoinder) ஒன்றை தாக்கல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதனால் அரசு கருவூலத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2023-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் காலகட்டத்தில் 28 குவாரிகளில் எடுக்கப்பட்ட மணலின் அளவை மதிப்பீடு செய்ய ஐஐடி-கான்பூரை அமலாக்கத் துறை நியமித்தது.
இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மணல் அள்ளப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளில் ரூ4,730 கோடி மதிப்புள்ள மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. ஆனால், தமிழக அரசின் கணக்கின்படி மணல் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட வருவாய் வெறும் ரூ36.45 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தமிழக நீர்வள ஆதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், ஐஐடி-கான்பூர் இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ராஜீவ் சின்ஹாவுக்கு இதற்கான அதிகாரம் வழங்கப்பட்டதா என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.
Read More