ஒரு மாதத்தில் வரும் பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை..
சென்னை பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், இது பயணிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், வாகன நெரிசலைத் தவிர்க்கும் விதமாகவும், பயணங்களை எளிதாக்கும் விதமாகவும் போக்குவரத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த 2008ஆம் ஆண்டு சென்னையில் செயல்பாட்டுக்கு வந்தது மெட்ரோ ரயில் திட்டம். சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மொத்தம் 118 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. இதில், முதல் வழித்தடமாக பூந்தமல்லி முதல் போரூர் சந்திப்பு வரையிலான 9 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் சேவை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இந்த வழித்தடத்துக்கான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள போரூர், ஐயப்பன்தாங்கல், குமணன்சாவடி, கரையான்சாவடி உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயில் வருவதால் தங்கள் பயணம் இனி எளிமையாகும் என தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவையில் 13 ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக ஓட்டுநர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில் சேவையும் இதில் கொண்டுவரப்படவுள்ளது. எனினும் முதல் 6 மாதங்கள் லோகோ பைலட் ரயில் பெட்டியில் இருந்து கண்காணிக்க உள்ளனர். அதேபோல இந்த வழித்தட நிலையங்களில் அரை உயர மேடை திரை கதவுகள் (Half-height Platform Screen Doors) அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், உயர்த்தப்பட்ட (Elevated) வழித்தடங்களில் இத்தகைய பாதுகாப்பு தடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், உயர்த்தப்பட்ட (Elevated) வழித்தடங்களில் இத்தகைய பாதுகாப்பு தடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
