விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு… காவலர்கள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்..
சிவகங்கையில் விசாரனைக்கு அழைத்து செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞர் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கோயிலுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த மருத்துவர் நிகிதாவின் காரை பார்க்கிங் பகுதிவரை எடுத்துச் சென்று நிறுத்தியுள்ளார். இதன் பின்னர், காரில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் இல்லாதது தெரியவந்ததால், மருத்துவர் நிகிதா திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை அடுத்து கோயிலுக்குச் சென்ற காவல்துறையினர் அஜித்குமாரை விசாரணை செய்ததுடன், அவரை தங்களது வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில், திடீரென அஜித்குமார் உயிரிழந்துவிட்டதாக கூறியதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருப்புவனம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய பின்னர், தனிப்படை காவலர்கள் 7 பேர், அஜித்குமாரை அருகில் உள்ள தோப்பிற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதால் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, திருப்புவனம் காவல்நிலைய காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். எனினும், திருப்புவனம் காவல்நிலைய காவலர்களை கைதுசெய்ய வலியுறுத்தி அஜித்குமாரின் உறவினர்கள் 2-ஆவது நாளாக மடப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த அஜித்குமாரின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சிவகங்கை மாவட்ட மாஜிஸ்திரேட் வேங்கடபிரசாத், அங்கு நேரில் சென்று குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, அஜித்குமாரின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும், குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென உறவினர்கள் மனு அளித்தனர். அஜித்குமாரின் உடலை அவரது குடும்பத்தினர் பார்த்த பிறகு, உடற்கூராய்வுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, வீடியோ பதிவு செய்யப்பட்டு, உரிய விதிமுறைகளின்படி, உடற்கூராய்வு செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சொந்த ஊரான மடப்புரம் கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
இந்த நிலையில், இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெய்பீம் படம் பார்த்தேன் உள்ளம் உலுக்கியது என கூறிய முதலமைச்சர் எங்கே இருக்கிறார் என கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வினவியுள்ளார். விசாரணை எனும் போர்வையில் இளைஞரை அடித்து துன்புறுத்தியதாக உறவினர்கள் கூறுவது ‘Lockup’ மரணமோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இளைஞர் மரண விவகாரத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
