பழைய ஓய்வூதியத் திட்டம்: நாளை அரசு பேச்சுவார்த்தை – அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்குமா?
பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாளை அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை’ (OPS) மீண்டும் அமல்படுத்துவது குறித்து நாளை (டிசம்பர் 22, 2025) தமிழக அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் குழு விரிவான ஆலோசனையை நடத்த உள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் காலை 10:00 மணியளவில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் தமிழக அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
நாளை நடைபெறும் கூட்டத்தில, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. அதாவது, 2004-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவதில் உள்ள சாத்தியக்கூறுகள்.
பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது மற்றும் பிற ஊதிய முரண்பாடுகளைக் களைவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கடந்த தேர்தல்களில் தபால் வாக்குகள் ஆளுங்கட்சிக்கு எதிராகச் சென்றதாகக் கருதப்படுவதால், அரசு ஊழியர்களின் அதிருப்தியைப் போக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விஷயத்தில் நேரடி கவனம் செலுத்தி வருகிறார்.
அமைச்சர் ஐ. பெரியசாமி இதுகுறித்து அண்மையில் பேசும்போது, “முதலமைச்சர் அரசு ஊழியர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அவர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) என்பது ஊழியரின் கடைசி மாதச் சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக உறுதியாகக் கிடைக்கும். இதில் பணவீக்கத்திற்கு ஏற்ப அகவிலைப்படி (DA) உயரும். புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது இது சந்தை சார்ந்த முதலீடு என்பதால், ஓய்வூதியத் தொகைக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை
நாளை நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு சுமுகமான தீர்வு எட்டப்பட்டால், அது தமிழகத்தின் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு ஒரு மிகப்பெரிய புத்தாண்டுப் பரிசாக அமையும். அமைச்சர்களின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது குறித்த இறுதி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
