ஜன.23 மோடி தமிழகம் வருகை
தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தையை ஒதுக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், மோடி சாலை பயணத்தை தவிர்த்து முற்றிலும் சிறப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே பயணிக்க உள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 1:15 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் புறப்படும் மோடி மதியம் 2:15 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் பழைய முனையத்தை வந்தடைவார்.
பின்னர் மதியம் 2.25 மணிக்கு சிறப்பு ஹெலிகாப்டரில் ஏறி பிற்பகல் 3 மணிக்கு நேரடியாக மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வார். இந்த பொதுக் கூட்டம் மதியம் 3 மணி முதல் 4:30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டு உரையற்றுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி மாலை 4:30 மணிக்கு மதுராந்தகத்தில் இருந்து அதே ஹலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் திரும்புவார். அங்கிருந்து மாலை 5:05 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்வார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சிறப்பு பாதுகாப்புக் குழுவின் (SPG) குழு ஒன்று சென்னை வந்தது. நேற்று (ஜன.20) காலை, பழைய சென்னை விமான நிலைய முனையத்தில் சிறப்பு குழு பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தை நடத்தியது.
பிரதமரின் சிறப்பு விமானங்களுக்கான பார்க்கிங் பகுதி, நியமிக்கப்பட்ட ஹெலிகாப்டர் தரையிறங்கும் மண்டலம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கான பணியமர்த்தல் திட்டம் ஆகியவற்றை சிறப்பு பாதுகாப்பு குழு விரிவாக ஆய்வு செய்தது. 20-ஆம் தேதி முதல் ஜனவரி 23-ஆம் தேதி பிரதமர் வருகை வரை நான்கு நாட்களுக்கு பழைய சென்னை விமான நிலையத்தை விரிவான பாதுகாப்பின் கீழ் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய ஆய்வைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் விமான நிலையம் தரையிறங்கும் பகுதியை பாதுகாப்பு குழு ஆய்வு செய்வதற்காக மதுராந்தகத்திற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.
