“இரண்டு நாளில் இராணுவ நடவடிக்கைக்கு வாய்ப்பு..” – முன்னாள் குரூப் கேப்டன் வினோத்
ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கோரத் தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த அதிகாரி, ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீநகருக்கு சென்ற அவர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் அன்புக்குரியவர்களை இழந்த வலியை ஒவ்வொரு இந்தியரும் உணர்கிறார்கள். இந்த துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அப்பாவி மக்களைக் கொன்ற இந்த பயங்கரவாதிகள் எந்த சூழ்நிலையிலும் தப்பவிடப்பட மாட்டார்கள் என்பதை பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும், முழு நாட்டிற்கும் உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி வந்த அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது, “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வாகா எல்லை மூடப்படும். பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தான் மக்கள் இந்தியா வர தடை. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு.
பாகிஸ்தான் அதிகாரிகள் ஒரு வாரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற ஆணை. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 30 ஆக குறைப்பு. சிந்து நதி ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு. பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து செய்யப்படும். நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் தேடி கண்டுபிடித்து தண்டனை கொடுக்கும் வரை ஓய மாட்டோம். பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியா திரும்ப வேண்டும்” என அறிவித்துள்ளார்.
சார்க் விசா ரத்து. சார்க் விசாவில் வந்துள்ள பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்தில் திரும்ப செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூதரகங்களில் இருக்கக் கூடிய பாதுகாப்பு அதிகாரிகளை வெளியேற சொல்லியிருக்கிறார்கள்.
பாதுகாப்பு அதிகாரிகள் திரும்ப செல்ல சொல்லியிருப்பது மிகவும் முக்கியமானது. காரணம் இந்த அறிவிப்பு வந்ததும், அவர்களும் இதே அறிவிப்பை வெளியிடுவார்கள். இதனைத் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும். அப்படித்தான் நமக்கான வரலாறு இருக்கிறது. எனது அனுபவத்தின் அடிப்படையில் இன்னும் இரண்டு, மூன்று நாளில் ராணுவ நடவடிக்கை வருவதற்கான வாய்ப்புஇருப்பதாகக் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
