இன்றுடன் முடிவடைந்த காலக்கெடு… இந்தியாவை விட்டு வெளியேறிய 537 பாகிஸ்தானியர்கள்!
இன்றுடன் முடிவடைந்த காலக்கெடு… இந்தியாவை விட்டு வெளியேறிய 537 பாகிஸ்தானியர்கள்!
‘சார்க்’ விசா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், இதுவரை 537 பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இதேபோன்று தங்கள் நாட்டில் தங்கியிருக்கும் இந்தியர்கள் வெளியேறவும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.
சார்க் விசா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நேற்றைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், கடந்த நான்கு நாட்களில் 537 பாகிஸ்தானியர்கள் அட்டாரி – வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதேபோன்று பாகிஸ்தானில் தங்கியிருந்த இந்தியர்கள் 850 பேர் கடந்த நான்கு நாட்களில் நாடு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சார்க் விசா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக வந்த பாகிஸ்தானியர்கள் நாளைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே புதுச்சேரியில் விசா காலாவதியான பிறகும் தங்கியிருந்த இரண்டு பாகிஸ்தானியர்களை வெளியேற்ற குடியேற்றத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
