highcourt

ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணிலும் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு …

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வு உறுதி செய்தது.

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் கோயில் செயல் அலுவலர், மதுரை ஆட்சியர், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றும் வசதியுடன் கூடிய கல் தூண், தமிழில் ‘தீபத்தூண்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த தூண் அமைந்துள்ள இடம், உரிமையியல் நீதிமன்றத்தால் கோயிலின் சொத்து என அறிவிக்கப்பட்ட மலையின் ஒரு பகுதியில் உள்ளது. தற்போது வரை அந்த இடத்துக்கு வக்பு வாரியம் உரிமை கோரவில்லை.
இந்த வழக்கு விசாரணையின் போதுதான் முதல்முறையாக வக்பு வாரியம் சார்பில், விளக்குத் தூண் தர்காவுக்குச் சொந்தமானது என்று தீய உள்நோக்கத்துடன் கூடிய வாதம் முன்வைக்கப்பட்டது. கடந்த 1994-ம் ஆண்டு ரிட் மனுவில் நீதிமன்றம் தர்கா சொத்தில் இருந்து 15 மீட்டர் தொலைவுக்கு அப்பால் என்ற கட்டுப்பாடுடன், கோயிலுக்குச் சொந்தமான மலையில் வேறு எந்தப் பகுதியிலும் தீபம் ஏற்றுவதற்கான இடத்தை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கியது. அந்த வழிகாட்டுதலின் நோக்கம், பாதுகாப்பை உறுதி செய்வதே ஆகும். தீபம் ஏற்றுவதற்கான மாற்று அல்லது கூடுதல் இடத்தை தேர்வு செய்யும் போது, தர்கா சொத்தின் பாதுகாப்பு மட்டுமே கட்டாய நிபந்தனையாகும்.

உகந்த இடம்: இங்கு ‘தீபத்தூண்’ என்று அழைக்கப்படும் கல் தூண், தர்கா அமைந்துள்ள உச்சியை விடத் தாழ்வான ஒரு பாறை உச்சியில் இருப்பதால், அது தீபம் ஏற்றுவதற்கு உகந்த இடமாகும். கார்த்திகை தீபம் மற்றும் பிறபண்டிகைகளின் போது உயரமான இடத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். மலை அடிவாரத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள பக்தர்கள் அதைப் பார்த்து வழிபடுவர். ஒளி என்பது சிவபெருமானின் உருவகம் என திருமூலர் கூறியுள்ளார். உயரமான இடத்தில் விளக்கேற்றும் வழக்கம் இருக்கும் போது, கோயில் சொத்தின் எல்லைக்குள் ஒரு இடம் கிடைக்கும் போது, அது ஒழுக்கம் மற்றும் பொதுக் கொள்கைக்கு விரோதமாக இல்லாத போது, பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோயில் நிர்வாகம் மறுக்க எந்தக் காரணமும் இல்லை.
விளக்கேற்றுவதற்காக கோயிலைச் சேர்ந்த சிலரை மட்டும் தூண் பகுதிக்கு அனுமதித்து, பக்தர்களை மலையடிவாரத்தில் நின்று வழிபட செய்வது ஒன்றும் சமாளிக்க முடியாத செயல் அல்ல. இந்தக் கூட்டத்தால் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும், கூட்ட நெரிசல் ஏற்படும், சமூகங்களிடையே நல்லிணக்கமின்மை ஏற்படும் என்பது போல சித்தரிப்பது, சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பதில் அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதா கவோ அல்லது சமூகங் களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் உள்ள தயக்கத்தையோ காட்டுகிறது.

2 சமூகங்கள்: இதை 2 சமூகங்களுக்கு இடையேயான வேறுபாடுகளைக் களைவதற்கு, மாநில அரசு வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அமைதியான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் இரு சமூகங்கள் இடையிலான இடைவெளியைக் குறைத்திருக்க முடியும். துரதிருஷ்டவசமாக இத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கவே செய்துள்ளன. நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை, அந்தந்த சமூகங்களின் விழாக்களின் போது தேவைக்கேற்ப மாற்றத்தை ஏற்படுத்தி, செயல்படுத்துவதன் மூலம் மோதல் இல்லாமல் அமைதி மட்டுமே நிலவும் என நம்புகிறோம். எனவே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும். மலையில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க பொருத்தமான, அவசியமான நிபந்தனைகளை மத்திய தொல்லியல் துறை வகுக்க வேண்டும்.
தமிழ் மாதமான கார்த்திகையில், வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோயில் நிர்வாகம் தனது குழுவின் மூலம் தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும். தீபம் ஏற்றச் செல்லும் கோயில் தரப்பு குழுவுடன் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது. தீபம் ஏற்றும் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை மத்திய தொல்லியல் துறை மற்றும் காவல் துறையுடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். தீபம் ஏற்றும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அமைதி கெடும் என்பது அபத்தமானது: நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மேலும் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது நடைமுறையில் இல்லாத வழக்கம் என்று அரசும், கோயில் நிர்வாகமும் கூறவில்லை. கோயிலுக்குச் சொந்தமான மலை உச்சியில் அமைந்திருக்கும் தூணில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கோயில் தரப்பில் விளக்கேற்ற அனுமதிப்பதால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்று அரசு அச்சப்படுவது அபத்தமானது. அரசு தூண்டிவிட்டால் மட்டுமே குழப்பம் நிகழக் கூடும். எந்த அரசும், தங்கள் அரசியல் நோக்கங்களை அடைய இந்த அளவுக்கு தரம் தாழக் கூடாது.

மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றினால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படக் கூடும் என்று மாவட்ட நிர்வாகம் வெளிப்படுத்திய அச்சம், அவர்களின் வசதிக்காக உருவாக்கிய கற்பனையே தவிர வேறில்லை. ஒரு சமூகத்தை, மற்றொரு சமூகத்துக்கு எதிராக சந்தேகம் கொள்ள வைக்கவே இது செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் கோயில் நிதியில் கட்ட தடை விதிக்கக் கோரி, ஏ.பி. பழனி என்பவர் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின்போது, 80 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும்,
7 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் கட்டடங்கள் மூலம், மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் எனவும் தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், முத்துகுமாரசுவாமி கோயில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை தொடர அனுமதி அளித்தது.
நவம்பர் 22ஆம் தேதி பதில் அளிக்க தமிழக அரசுக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் ஆணையிட்டது. மேலும், கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சுற்றறிக்கை வெளியிட அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்

கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி.. மாநகர காவல் ஆணையர், டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து அரசு பிறப்பித்த உத்தரவு குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் தெரிவிக்குமாறு டிஜிபி மற்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு கடந்த ஜூன் 4ஆம் தேதி முடிவடைந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகளுக்கு அனுமதியை நீட்டித்து அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், 24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி அளித்த அரசு உத்தரவை மீறி இரவு நேரங்களில் கடைகளை மூடும்படி காவல்துறை மிரட்டுவதாக உயர்நீதிமன்றத்தில் டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தேசிய ஓட்டல்கள் சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Read More
அரசியல்சினிமாதமிழ்நாடு

‘தக் லைஃப்’ படத்துக்கு கர்நாடகத்தில் தடையா?… மன்னிப்பு கேட்டாரா கமல்? – நீதிமன்ற விசாரணை..

“கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ‘தக் லைஃப்’ படத்தை ஒத்திவைக்கவும் தயார்” என்று கர்நாடக உயர்நீதின்றத்தில் கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ‘தக் லைஃப்’ படத்தை ஒத்திவைக்கவும் தயார்” என்று கர்நாடக உயர்நீதின்றத்தில் கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னட மொழி என கமல்ஹாசன் பேசியது, கர்நாடகாவில் சர்ச்சையான நிலையில், அவர் நடித்துள்ள தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் அறிவித்தது. இதனை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, மொழி குறித்து பேச கமல்ஹாசன் என்ன மொழி ஆய்வாளரா இல்லை, வரலாற்று ஆய்வாளரா என வினவினார். பொதுவெளியில் ஒரு பிரபலமான நபர் இப்படி பேசலாமா என கமலுக்கு கேள்வியெழுப்பிய நீதிபதி, ஒரு மன்னிப்பு கேட்டிருந்தாலே இந்த பிரச்னை முடிந்திருக்கும் என்று கருத்து தெரிவித்தார். மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில், தான் உருவாக்கிய பிரச்னைக்கு, தற்போது காவல்துறை பாதுகாப்பு கேட்டு சினிமா வியாபாரத்திற்காக கமல்ஹாசன் வந்திருப்பதாகவும் நீதிபதி கடுமையாக சாடினார்.
நீர், நிலம், மொழி இவை மூன்றுமே குடிமக்களுக்கு முக்கியமானது என்றும் மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என்றும் நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொடர்ந்து மொழி குறித்த தனது பேச்சுக்கு கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பின்னர் மனு விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதையடுத்து 2.30 அளவில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது கமல் தரப்பில், “நாங்கள் கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இந்தப் படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க தயாராக இருக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக கமல் தரப்பில், “யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் கமல் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. கமல்ஹாசன் கன்னட மொழி மீது நிகரற்ற அன்பை வைத்திருக்கிறார்” என்பதை கேட்ட நீதிபதிகள், “இந்த கடிதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஏன் மன்னிப்பு இல்லை” என கேள்வி எழுப்பியது. அதற்கு கமல் தரப்பு, “தவறு செய்தால் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம். ஆனால் தவறாக புரிந்துகொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க முடியும்” என கமல் தரப்பில் மன்னிப்பு கேட்க கமல் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

Read More
அரசியல்நிகழ்ச்சிகள்

உள்ளாட்சி அமைப்புகளில் இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலம் முடியும் முன்பே, சிலர் உயிரிழந்துவிட்டதாகவும், சிலர் ராஜினாமாவும் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
காலி பணியிடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடத்த உள்ளாட்சி நிர்வாகம் கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் புகைப்படங்கள் இல்லை என்றும் சில இடங்களில் இடஒதுக்கீட்டை இறுதி செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பணி இடங்களுக்கு, வாக்காளர்களின் புகைப்படங்களுடன் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என்றும் 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீட்டை செய்து தேர்தல் நடத்தவேண்டும் என்றும் அதற்கு முன்பு தேர்தல் நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
காலி பணியிடங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு முன், புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Read More