freebees

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

பொங்கல் பரிசுத் தொகை -சலுகைகளை பெற-  PHH அல்லது NPHH ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே…

தமிழ்நாட்டில் சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. தமிழ்நாடு அரசு பொங்கல் ரொக்கப் பரிசு, பேரிடர் நிவாரணம் உள்ளிட்டவற்றை அறிவிக்கும்போது ரேஷன் அட்டைகளின் அடிப்படையிலேயே அவை வழங்கப்படும்.
அரசு அறிவிக்கும் இந்த ரொக்கம் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் கிடைக்குமா என்றால் இல்லை. சில குறிப்பிட்ட அட்டைகளுக்கு இந்த ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட மாட்டாது. அதற்கு என்ன காரணம் தெரியுமா?
தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. அதன்படி, அரிசி உட்பட அனைத்து பொருட்களும் கிடைக்கும் PHH அட்டை, அரிசி உட்பட அனைத்து பொருட்களும் இருந்தாலும், சலுகைகளில் இரண்டாம் இடத்தில் இருக்கும் NPHH அட்டை, அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் இல்லாமல், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மட்டும் கிடைக்கும் NPHH –S அட்டை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள முதியோருக்கு அதிக அளவில் அரிசி கிடைக்கும் AAY அட்டை, வெறும் முகவரி அடையாளத்திற்கு மட்டும் பயன்படும் NPHH-NC அட்டை ஆகியவைதான் இந்த ஐந்து வகைகள்.
நீங்கள் அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்றால் அரிசி அட்டையான PHH அல்லது NPHH அட்டை வகையில் இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் சர்க்கரை அட்டை வைத்திருந்தால் அதனை மாற்ற முடியுமா என்றால் நிச்சயம் முடியும்!
அரிசி அட்டை வைத்திருப்பவர்கள் சர்க்கரை அட்டைக்கு மாற விரும்பினால் அதனை எளிதில் பெற்றுவிடலாம். நீங்கள் (TN PDS) இணையதளம் (tnpds.gov.in) அல்லது அதன் மொபைல் செயலி மூலம் எளிதில் விண்ணப்பித்து அரிசி அட்டையில் இருந்து சர்க்கரை அட்டைக்கு மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால், சர்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு மாறுவது என்றால் அது கொஞ்சம் சிக்கலானதே. ஆனால், அரசு கேட்கும் ஆவணங்களை முறையாக சமர்ப்பித்தால் எளிதாக மாறிவிடலாம். அரசு கேட்கும் ஆவணங்கள் என்ன தெரியுமா?
நீங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர் என்பதையும், அரசின் சலுகைகளைப் பெறத் தகுதியானவர் என்பதையும் அதிகாரிகளுக்கு நிரூபிக்க வேண்டும். உண்மையிலேயே ஏழ்மையில் இருப்பவர்கள் அல்லது பொருளாதாரச் சூழல் மாறியதால் தகுதியானவர்கள், முறையாக விண்ணப்பித்தால் அட்டை வகையை மாற்றிக்கொள்ள முடியும். இதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (மண்டே பெட்டிஷன்) மனு கொடுக்க வேண்டும்.
இதனுடன் நீங்கள், ஆதார் அட்டை, புகைப்படங்கள், வறுமைக் கோட்டுப் பட்டியலில் உள்ளவர் என்பதற்கான ஆதாரம், வி.ஏ.ஓ.விடம் உங்கள் பொருளாதார நிலை குறித்தான அறிக்கை ஆகியவற்றை வழங்க வேண்டும்.
ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உங்கள் மனு உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலருக்கு (DSO) அனுப்பப்படும். அவர்கள் கள ஆய்வு அறிக்கை கொடுப்பார்கள். ஆனால், இத்துடன் உங்கள் ஆதார் எண் மூலம் மத்திய அரசின் தரவுகளைச் சரிபார்த்து, உங்கள் உண்மையான சொத்து மதிப்பு, வருமானம், வரி விவரங்கள், நீங்கள் வாங்கிய கடன்கள் போன்ற அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்வார்கள். எனவே முறைகேட்டில் ஈடுபட்டு சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற முடியாது.

Read More