ahamadabhad

இந்தியாதமிழ்நாடு

விமான விபத்தில் உயிர் பலி ஏன்? உள்துறை அமைச்சர் விளக்கம்

குஜராத் மாநிலம்
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்
, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை தேசிய பாதுகாப்பு படையினர் மீட்டனர். விமான விபத்து குறித்து கேள்விப்பட்டதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமானம் மூலம் டெல்லியிலிருந்து குஜராத் சென்றார். விபத்து நடந்த இடத்திற்கு சென்ற அமித் ஷ விமானத்தின் நொறுங்கிய பாகங்களை பார்வையிட்டார். சேதமடைந்த பி.ஜே மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்திலும் ஆய்வு செய்தார்.
பின்னர் விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அமித் ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, நினைத்துப் பார்க்க முடியாத இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்று கூறினார். டிஎன்ஏ மாதிரி பரிசோதனைக்குப் பின்னரே இறந்த அனைத்து பயணிகளையும் முறையாக அடையாளம் காண முடியும் என்று தெரிவித்தார். விமான விபத்துக்கான காரணம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தனது தொழில் வாழ்க்கையில் மிக மோசமான நாள் என்று வேதனை தெரிவித்துள்ள டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அளிப்பதாக அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களின் மருத்துவ செலவை ஏற்பதாகவும், விபத்தில் சேதமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி கட்டித் தரப்படும் எனவும் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப், ஐ.நா தலைவர் அண்டோனியா குட்டரெஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, விமான விபத்தை நேரில் ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று அகமதாபாத் செல்கிறார். அப்போது, விமான விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.

Read More