100days

அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

100 நாள் வேலை திட்டம் தொடர்பாக பேரவையில் இன்று தீர்மானம்…

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களின் கோரிக்கையை 99 சதவீதம் நிறைவேற்றி இருப்பதாகத் தெரிவித்தார். போராடும் அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோமே தவிர, அதிமுகவைப் போன்று எஸ்மா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கவில்லை என்றும் கூறினார்.
அப்போது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவைப் போல பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களை தாங்கள் ஏமாற்றவில்லை என்றார். இதில் பதில் அளித்த முதலமைச்சர், அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், திமுகவுக்கு ஆதரவான சங்கங்கள்தான் இனிப்பு ஊட்டியதாக ஈபிஎஸ் தெரிவித்தார். அரசு ஊழியர்களின் போராட்டத்தை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும், மிகுந்த அக்கறையோடு கவனிப்பதாகவும் கூறிய முதலமைச்சர், எதிர்க்கட்சித்தலைவர் முதல்வராக இருந்தபோது, அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து கொச்சைப்படுத்தி பேசியதை நாடு மறந்துவிடவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சத்துணவு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் குறிப்பிட்டார். முன்னதாக, நேரமில்லா நேரத்தில், கறிக்கோழி விவசாயிகளின் பிரச்னை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் பற்றி விவாதிக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்தினார். அதற்கு, அதிமுகவின் தீர்மானத்திற்கு பதில் தயாரித்து விட்டு ஏற்றுக் கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், இதனை ஏற்காத அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக பேரவையில், 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 100 நாட்கள் பணிக்காலம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவித்த திமுக, தற்போதுவரை நிறைவேற்றவில்லை எனக் கூறிய ஈபிஎஸ், மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியுள்ளதை தாங்கள் வரவேற்றதாகவும், ஆனால் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

Read More