தொழில்துறை அமைச்சரானார் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா..!
முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆண்டு அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாசர் பால்வளத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விடுக்கவிக்கப்பட்டு டிஆர்பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக இருப்பவர் டிஆர்பி.ராஜா. இவர் மன்னார்குடி எம்.எல்.ஏவாக உள்ளார். திமுக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி ஆர் பாலுவின் மகனான இவர் கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா பதவி ஏற்றுள்ளார். டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதை தொடர்ந்து ஆளுநர் ரவியுடன் புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
