தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட விஏஓ குடும்பத்தினரிடம் ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்கிய கனிமொழி
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் பணியில் இருந்த போது படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நிவாரண நிதி உதவியாக ரூபாய் 1 கோடி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் .

இந்நிலையில், இன்று (01/05/2023) , தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூபாய் 1 கோடிக்கான காசோலையை வழங்கினார் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி .

இந்நிகழ்வில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா இராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆட்சியர் கௌரவ் குமார், ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி மற்றும் பலர் உடனிருந்தனர்.
